நாட்டின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் கூட்டுப்பொறுப்புள்ளது – குறைகளை மட்டும் விமர்சிப்பது அவர்களின் திறமையின்மையே காட்டுகின்றது – ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு குழுவாகச் செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஏற்படும் பின்னடைவுகளை, ஒரு குழுவாக எதிர்கொள்வது கூட்டுப் பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள் ஜனாதிபதி அவ்வாறு செய்யாமல், குறைகளை மட்டும் விமர்சிப்பது சம்பந்தப்பட்டவரின் திறமையின்மையே ஆகுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இழந்த இரண்டு வருடங்களைப் பற்றி சிந்திக்காமல், உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒவ்வொரு நாடாமன்ற உறுப்பினரும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறார்கள். எவ்வாறாயினும், அரசியலமைப்பின் மூலம் வழங்கக்கூடிய 30 அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்கி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேநேரம் மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உதவுவது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடமை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தீர்மானங்களை எடுக்கும்போது அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை மட்டும் பாருங்கள் என்றும் அவ்வாறில்லாமல் சுற்றறிக்கைகளின் மூலம் எவ்வாறு வேலை செய்யாதிருப்பதெனப் பார்க்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அந்தவகையில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு முழு ஆதரவை வழங்குமாறு, அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.
மக்களுக்கான வலுவான அரச சேவையை உருவாக்குவதற்காக, எதிர்காலத்தில் அரச நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சித்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு மக்களின் அபிலாஷைகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இராஜாங்க அமைச்சர் ஒருவரை நீக்கவேண்டிய நிலையேற்பட்டது, இந்த அரசாங்கம் தவறான விதத்தில் செயற்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவிக்கின்றார் என்றால் அவர் நானும் தவறிழைப்பதாக குற்றம் சாட்டுகின்றார் என்பதே அர்த்தம் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் இராஜாங்க அமைச்சருக்கும் அரசாங்கத்தை நோக்கி கூட்டு பொறுப்புள்ளது,- ஒருவர் மற்றவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார் என்றால் அவர் தனது திறமையின்மையை வெளிப்படுத்துகின்றார் என்பதே அதன் அர்த்தம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை பதவி நீக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் குறித்தே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுசில் பிரேமஜயந்த தனது அரசாங்கம் குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைத்திருந்தார், குறிப்பாக இரசாயன உர தடையை அவர் கடுமையாக சாடியிருந்தார்.
2000 ஆம் ஆண்டுமுதல் பல அமைச்சரவை பதவிகளை வகித்த சிரேஸ்ட அரசியல்வாதியான சுசில் பிரேமஜயந்த தான் புறக்கணிக்கப்படுவது குறித்தும் அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன் சட்டங்கள் வேறு எங்கோ இயற்றப்படுகின்றன என தெரிவித்திருந்தார்.
ஆனால் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் தங்களை காப்பாற்ற முயல்கின்றனர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|