நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, October 30th, 2020

நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல சந்தர்ப்பங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததற்கான காரணத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமெனவும், அவ்வாறான நிலைமையை மீண்டும் அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முடிந்தவரை பின்பற்றுவது அனைத்து தரப்புகளினதும் சமூகப் பொறுப்பு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்படக்கூடுமென கருதப்படும் பிரதேசங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள், தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், பி.சி.ஆர். பரிசோதனை சேவைகள், தீர்மானங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் காணப்படும் 350 சுகாதார  பிரிவுகளில், 28 பிரிவுகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றாளர்களுடன் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புடையவர்கள் சுமார் 41 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்  குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: