நாடு முழுவதும் சோதனை; 1,246 பேர் கைது!

Sunday, March 12th, 2017

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளிலிருந்து, 1,246  சந்தேகநபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன

நேற்று முன்தினம் (10) இரவு 11.00 மணியிலிருந்து இன்று (11) அதிகாலை 4.00 மணி வரையான காலப் பகுதியில் நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களால் குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையின்போது, விசாரணை செய்யும் பொருட்டு, பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 1,246 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதில், குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட 110 பேரும் வான் படையிலிருந்து தப்பிச் சென்ற நால்வரும், கடற்படையிலிருந்து தப்பிச் சென்ற மூவரும் உள்ளடங்குகின்றனர். இவர்களது கைரேகைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.இப்பணிகளுக்காக நாடு முழுவதிலுமுள்ள 11,792 பொலிசார் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 87 பேரும், கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த 45 பேரும், ஹெரோயினை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 26 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 567 பேரும், பொலிசாரால் கைது செய்வதற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் 109 பேரும் உள்ளடங்குவதோடு, போக்குவரத்து விதிகளை மீறி செயற்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்ட 307 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுள் குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 76 பேரும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நடவடிக்கை, அண்மைக்காலத்தில் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை என குறிப்பிடலாம் என்பதோடு, விசேடமாக குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் பொருட்டு இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களிலும் மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related posts: