நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பாதுகாப்புச் செயலாளரினால் வழங்கிவைப்பு!

Tuesday, November 30th, 2021

நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்  நாடாளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளன..

இந்த பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் நாடானுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட உபகரணங்களில் ஒரு ட்ரோன் ஜாமர் மற்றும் பாதுகாப்பு பொறிமுறையை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படும் பாதுகாப்பு தகவல் தொடர்பு சாதனங்கள் என்பன அடங்குகின்றன.

இவ்வாறு கையளிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் சந்தைப் பெறுமதி விலை 19 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அவிருத்தி மையம் இதனை 07 மில்லியன் ரூபாய் செலவில் உள்நாட்டில் தயாரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களை வழங்கியமைக்காக பாதுகாப்புப் படையினருக்கு சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், எமது படையினர், பாதுகாப்புப் படைக்கு மட்டுமல்ல ஏனைய தேசியத் தேவைகளுக்கும் உயர் தொழில்நுட்ப ரீதியான உபகரணங்களைத் தயாரிக்கும் திறன்களை கொண்டுள்ளதாவும் அதன் மூலம் தேசிய நிதியினை பாதுகாக்கும் திறனை பாதுகாப்புப் படையினர் வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 2020 ஜூலையில் நடைபெற்ற கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சியின் போது அடையாளம் காணப்பட்ட பாதுகாப்புத் தேவைக்கு இணங்க இந்த உபகரணத் தொகுதிகள் வழங்கப்படுவதாக சார்ஜென்ட் அட் ஆர்ம்ஸ் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: