நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க பொதுசுகாதார பரிசோதகர்களின் உதவி கோரப்பட்டுள்ளது!

Thursday, May 27th, 2021

நாடாளுமன்றில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 5 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்களின் உதவிகள் பெறப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் எதிர்வரும் நாட்களில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பொது சுகாதார பரிசோதகர்களின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் கொரோனா தொற்றுறுதியான குறித்த நபர்களுடன் தொடர்புடையவர்கள், நாடாளுமன்ற பணிக்குழாமில் இருப்பார்களாயின், அவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு ஸ்ரீமத் மாகஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்கட்சி தலைவர் காரியாலத்தின் பணிக்குழாமினரில் 5 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானது. முன்னதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், அவரது மனைவிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து, அவர்களுடன் தொடர்புடையோருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில், ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பணிக்குழாமினருக்கும் கொவிட்19 தொற்றுறுதியானது.

அதேநேரம், எதிர்க்கட்சி தலைவருடன் தொடர்பை பேணியிருந்த நிலையில், தம்மை சுய தனிமைப்படுத்திக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில், அவருக்கு கொவிட்19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட்19 தொற்றுறுதியான நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குணமடைந்து வீடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: