நாடாளுமன்ற சர்ச்சை : விசாரணை செய்ய 7 நீதிபதிகள் நியமனம்!

Tuesday, November 27th, 2018

நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த வழக்கை விசாரணை செய்வதற்கு ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

குறித்த இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றத்தினால் பிற்போடப்பட்டது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் குறித்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இவ்வாறு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் 4 1/2 வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேராவினால் நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழு விபரம் வருமாறு புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முருது பெர்ணான்டோ ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: