நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திரங்கள் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை: இறைமைக்கு பாதிப்பு!

Sunday, October 9th, 2016

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் தீர்வை வரியற்ற வாகன அனுமதிப்பத்திரங்களை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்வதனால் மக்களின் இறைமை காட்டிக்கொடுக்கப்படுவதாக சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்..

இது குறித்து விசாரணை செய்யுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சாட்சியங்களுடன் அறிவித்துள்ளார்.எனினும், அது தொடர்பிலான விசாரணைகள் இன்னும் இடம்பெறவில்லை என சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு சுட்டிக்காட்டினார்.

1994 ஆம் ஆண்டு 8 ஆம் இலக்க வரி தொடர்பிலான விசேட சட்டத்தின் மூன்றாம் சரத்தின்படி தேசிய மற்றும் பொது தேவைகளை கருத்திற்கொண்டு தீர்வை வரியற்ற முறையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுத்தது.

இந்த தீர்வை வரியற்ற வாகன அனுமதிப்பத்திரம் காரணமாக அரசாங்கம் வருடாந்தம் 40 பில்லியன் ரூபா வருமானத்தை இழப்பதினால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இந்த தீர்வை வரியற்ற வாகன அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வதாக, 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி அரசாங்கத்தின் நிதி கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், மக்களின் இறைமையைப் பயன்படுத்தி வழங்கப்படும் தீர்வை வரியற்ற வாகன அனுமதிப்பத்திரங்களை மூன்றாம் தரப்பினர்களுக்கு விற்பனை செய்வதனால் இலங்கை 7875 பில்லியன் ரூபாவை இழப்பதாக சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன அனுமதிப்பத்திரத்தை கொள்வனவு செய்யும் தரப்பினர் பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை தனது பெயருக்கு மாற்றிக் கொள்வதற்காக அரசாங்கத்திற்கு 1650 ரூபாவை மாத்திரமே செலுத்துகின்றனர்.இவ்வாறு குறைந்த கட்டணத்தை செலுத்தி தமது பெயருக்கு மாற்றிக்கொள்ளும் மூன்றாம் தரப்பினருக்கு ஒரு வாகனத்திற்கு 35 மில்லியன் ரூபா நிவாரணம் கிடைக்கின்றது.

இந்த நிவாரணத்தை குறித்த பாராளுமன்ற உறுப்பினருடன் பிரித்துக்கொள்வதாக சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.35 மில்லியன் ரூபாவில் 25 மில்லியன் ரூபாவை பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக்கொள்வதாகும் மீதமாகவுள்ள 10 மில்லியன் ரூபா மூன்றாம் தரப்பினருக்குக் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மக்களின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இடம்பெறும் இந்த செயற்பாடு தொடர்பில் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

license

Related posts: