நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு – தேவை இருந்தால் கட்சித் தலைவர்கள் கூடி பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் – சபாநாயகர் அறிவிப்பு!

Saturday, April 9th, 2022

நாடாளுமன்றத்தை இம்மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு நேற்று (08) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் 22 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு குழு தீர்மானித்துள்ளது.

காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அமர்வும் வாய்மொழி பதில்களுக்கான கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை தொடர்பாக ஆராய்வதற்காக எதிர்வரும் திங்கள்ழமையும் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு எதிர்க்கட்சி முன்வைத்த வேண்டுகோளை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன நிராகரித்தார்.

அவ்வாறான தேவை இருந்தால் கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூடி அது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியுமென்றும் எனினும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் கிடையாது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீள அதில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்பதாக நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்றும் முடியுமானால் எதிர்வரும் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டி அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் சபையில் கேட்டுக் கொண்டார். அது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி எம். பி இரான் விக்ரமரத்ன முன்னாள் பிரதமர் முன்வைத்த யோசனை தொடர்பில் சபை முதல்வர் பதில் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதற்குப் பதிலளித்த போதே சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: