நாடாளுமன்றின் கௌரவத்தை இல்லாதொழிக்கும் வகையில்தான் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளது – எதிர்க்கட்சித்தலைவர் சஜித் குற்றச்சாட்டு!

Tuesday, September 22nd, 2020

மக்களின் ஜனநாயகம், நாடாளுமன்றின் கௌரவத்தை இல்லாதொழிக்கும் வகையில்தான் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார்.

இதற்கான எதிர்ப்பினை நாம் இவ்வேளையில் பதிவு செய்துக் கொள்கிறோம். எமது மனசாட்சியை சில்லறைகளுக்கு விற்கும் தரப்பு நாம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது, திருத்தச்சட்டமூலம் தொடர்பாக சஜித் பிரேதாச மேலும் கூறியுள்ளதாவது, “20 இன் ஊடாக ஆணைக்குழுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தனிக்கை ஆணைக்குழு முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பு சபையை இவர்கள் இல்லாதொழித்துள்ளார்கள். பொலிஸ் ஆணைக்குழுவுக்கான அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒரு பொம்மையாக மாற்ற நாம் விரும்பவில்லை. நாம் ஜனநாயகத்தை பலப்படுத்துவே இவ்வாறு எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகிறோம்.

19 இல் குறைகள் உள்ளமையை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். எனவே, இவற்றை நிவர்த்தி செய்து 19யை பலப்படுத்தி, ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தவே நாம் முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து தனிநபரை பலப்படுத்த திருத்தச்சட்டமொன்றைக் கொண்டுவரக்கூடாது. 20வது தொடர்பாக ஆராய குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது.

எனினும், இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை புறந்தள்ளி, திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளாமல்தான் 20 கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு விழுந்த மரண அடியாகும்” எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: