நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்து!

Sunday, July 26th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், கொரோனா நெருக்கடி காலப்பகுதியில் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளையும் ஆணைக்குழு பாராட்டியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

“கடந்த 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது பெறப்பட்ட அனுபவங்கள் மூலமும் கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட நடைமுறைகளின்படியும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு சிலவற்றை பரிந்துரைப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புக் கட்டளைச் சட்டத்தில் 2 மற்றும் 3வது பிரிவுகளின் கீழ் சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட கட்டளைகளில் தேர்தல் தினத்தன்று மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வாக்களிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்களித்தல் என்பது மிகமுக்கியமான மனித உரிமையாகும். எனினும் இம்முறை சுகாதார நிலைமை காரணமாக எவருக்கேனும் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு இடையூறுகள் ஏற்படலாம். ஆகவே இதனைத் தவிர்ப்பதற்காக மிகத்தெளிவான சுகாதார வழிகாட்டல் நெறிமுறைகளை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் பணியாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் எழுத்துமூலமாகப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: