நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அரச நிறுவனங்கள் விலகியிருக்கவேண்டும் – தேர்தல் ஆணைக்குழு !

Thursday, April 23rd, 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் அல்லது குழுக்கள் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஆதரவளிப்பதிலிருந்து அரச நிறுவனங்கள் விலகியிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது எனவும் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பதாக தற்போது நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அனர்த்த நிலை நிவாரணங்களை பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வழங்கிவரும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் அல்லது குழுக்கள் இதில் ஈடுபட்டு அரசியல் ரீதியான பரப்புரைகளை முன்னெடுத்து வந்திருந்தனர். இந்நிலையிலேயே குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: