நவீன வைத்திய முறைகளினால் மாற்ற முடியாத நோய்கள் சுதேச மருத்துவம் மூலம் குணமாக்கப்பட்டுள்ளது : வடக்கு சுதேச வைத்தியத் ஆணையாளர்  காட்டம்

Wednesday, April 13th, 2016

மருத்துவம் என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமானதொன்றாகும். இன்றைய காலப் பக்சுதியில் எமது வருமானத்தில் பெரும் பகுதியை வைத்தியத்துக்காகவே செலவிடுகின்றோம். சுதேச மருத்துவ முறையானது எமது வாழ்க்கை முறைகளுடன் பின்னிப் பிணைந்து உருவாக்கப்பட்டதொரு முறைமை. பல வைத்திய முறைகளினால் மாற்ற முடியாத நோய்கள் சுதேச மருத்துவம் மூலம் குணமாக்கப்பட்டுள்ளது. அதிகரித்துள்ள போதை வஸ்துப் பாவனை , சமூக வன்முறைகள், தொற்றா நோய்த் தாக்கம், உளவளப் பிரச்சினைகள் போன்றவற்றை ஈடு செய்யும் ஆற்றல் சுதேச மருத்துவத்திற்கு உண்டு எனத் தெரிவித்தார் வடமாகாண சுதேச வைத்தியத் துறை ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி  சி. துரைரட்ணம்.

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தைக்கு அண்மையில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்டுள்ள இலவச சித்த ஆயுள் வேத வைத்தியசாலையின் திறப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை (08-04-2016) காலை சபையின் செயலாளர் திருமதி- தி. அன்னலிங்கம் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வைத்தியசாலைக் கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாப்பதிலிருந்து நோய்களிலிருந்து நாம் மீண்டு சுகம் பெறும் வரை சுதேச மருத்துவத்தின் பங்கு அளப்பரியது. எமது அன்றாட உணவுப் பழக்க வழக்கம், வாழ்க்கை நடைமுறை ஆகியவற்றில் இம் மருத்துவம் சேர்ந்திருப்பது தவிர்க்க முடியாததாக உள்ள போதிலும் மாறி வரும் கால ஓட்டமும் , மேலைத்தேய மருத்துவத் துறையின் வளர்ச்சியும் சுதேச மருத்துவத்துறையின் பாவனையை மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்படுத்தியுள்ளது.

சுதேச மருத்துவத் துறையைப் பொறுத்த வரை மத்திய அரசு, மாகாண அரசு, உள்ளுராட்சி நிறுவனங்களின் கீழான வைத்தியசாலைகளும் காணப்படுவது வழமையாகும். மத்திய அரசின் கீழ் போதனா வைத்தியசாலைகளும், விசேட வைத்தியசாலைகளும், மாகாண நிர்வாகத்தின் கீழ் கள வைத்தியசாலைகள், மாவட்ட வைத்தியசாலைகள் , மத்திய மருந்தகங்களும், உள்ளுராட்சி அமைச்சின் கீழ் இலவச வைத்தியசாலைகளும் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் பொதுமக்கள் பல நன்மைகளைப் பெற்று வருகின்றனர்.

இந்த வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு மாகாண ஆணையாளர் எனும் வகையில் என்னாலான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்குத் தயாராகவுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

Related posts: