நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் சார்ந்த செயற்திட்டம் முன்னெடுப்பு – வடக்கிலும் விவசாயம் சார்ந்த செயற்திட்டத்திற்கான முன்மொழிவுகள் கோரல்!

Sunday, May 10th, 2020

சிறுகைத்தொழில் அமைச்சினூடாக இலங்கையின் 5 மாகாணங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் சார்ந்த செயற்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.

அந்தவகையில் வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களிடம் இருந்தும் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய உற்பத்தி பொருட்கள், ஏற்றுமதிக்கான உற்பத்திகள் போன்றவைக்கு குறித்த செயற்திட்டத்தில், முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

உதாரணமாக சேதனப் பசளை உற்பத்தி, பழங்கள் மற்றும் மரக்கறிகளை பதப்படுத்தல்,அறுவடையின் பின்னரான தொழில்நுட்பம், கால்நடை மற்றும் பால் உற்பத்திகளுக்கான பெறுமதி சேர் உற்பத்தி, புதிய தொழில்நுட்பங்களூடான பெரியளவான பயிர்ச்செய்கை,பழச்சாறு உற்பத்திகள், விவசாய உற்பத்திகளில் இருந்து நேரடியாக பொதி செய்யப்படும் உணவு தயாரிப்பு ஏற்றுமதி தரமுடைய மரவள்ளி சீவல், விவசாயத்திற்கான மாற்று சக்தி வழங்கல்- சூரிய மின் உற்பத்தி, தென்னைசார் பெறுமதி சேர் உற்பத்தி போன்றவைகளாகும். ஒரு திட்டமதிப்பீடு 1 கோடி ரூபாயாக இருப்பின் குறிப்பிட்ட அமைச்சிடம் இருந்து பகுதிபகுதியாக 50 இலட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும்.

40 இலட்சம் ரூபாய் வங்கிகளில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறுவதற்கான வசதிகள் செய்துதரப்படுவதுடன், 10 இலட்சம் ரூபாய் சொந்த முதலீடாக அமையும். இவ்வாறு 3 கோடி ரூபாய் வரையான திட்டங்களை சமர்ப்பிக்க முடியும்.

இதேவளை 30 – 375 மில்லியன் வரையான திட்டங்களுக்கு 100 மில்லியன் வரை அமைச்சினால் வழங்கப்படும்.

31.05.2020 என்ற திகதிக்கு முன்னர் குறித்த திட்டமுன்மொழிவுகளை சமர்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: