நவம்பர் 10 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வான்வழி சேவை!

Saturday, November 2nd, 2019

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கிடையிலான வர்த்தக விமானங்கள் நவம்பர் 10 ஆம் திகதியிலிருந்து தொடங்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்பட்ட பலாலி விமான நிலையம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறக்கப்பட்டது.

இந்நிலையில் நவம்பர் 1ஆம் திகதியிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் வரும் 10ஆம் திகதியிலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கான வர்த்தக விமானங்களின் சேவை ஆரம்பிக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து திணைக்களம் தற்போது அறிவித்திருக்கிறது.

இது தொடர்பில் சிவில் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் எச்.எம்.எம். சி. நிமல்சிறி செய்தியாளர்களிடம் பேசும் போது, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கிடையிலான வர்த்தக விமானங்கள் நவம்பர் 10 ஆம் திகதியிலிருந்து தொடங்கப்படும்.

வர்த்தக விமானங்களை இந்திய விமான நிறுவனம் ஒன்று இயக்குகிறது. ஏர் இந்தியாவின் சகோதர நிறுவனமான அலையன்ஸ்-ஏர், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு ஏழு விமானங்களை இயக்க விரும்புகிறது.

அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் குறிப்பிட்ட நேர அட்டவணைக்கு அமைய விமான சேவைகள் ஆரம்பமாகும். பகல் நேர விமான சேவை மாத்திரம் இடம்பெறும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான விமானப் பயணக் கட்டணமாக, 15, 690 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமானப் பயண நேரம் 32 தொடக்கம் 50 நிமிடங்களாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானப் பயணங்களுக்கான பயணச் சீட்டுகளை குறித்த விமான நிறுவனங்களின் இணையத்தளங்களின் மூலமாகவும், முகவர்கள் மூலமாகவும் கொள்வனவு செய்ய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டார்.

மேலதிகமாக, உள்நாட்டு விமான நிறுவனம் ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையங்களுக்கு வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்துக்கும், யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கும் இடையில், வாரத்தில் மூன்று விமான சேவைகளை நடத்தவுள்ளதாக பிட்ஸ் எயர் (Fits Air) நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: