நல்லூர் துப்பாக்கி சூட்டுச் சம்பவம்:  துப்பாக்கிதாரி இனங்காணப்பட்டார்!

Tuesday, August 8th, 2017

நல்லூர் வீதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. குறித்த சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றொரு மெய்ப்பாதுகாவலர் காயமடைந்திருந்தார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாள அணிவகுப்பில் இனங்காணப்பட்டுள்ளார்.

யாழ். நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அடையாள அணிவகுப்பு இன்றையதினம்  நடத்தப்பட்டது. இதன்போதே குறித்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் புங்குடுதீவைச் சேர்ந்த செல்வராசா ஜெயந்தன் என்பவர், கடந்த மாதம் 25ஆம் திகதி யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். யாழ்ப்பாணம் பொலிஸார் அன்றைய தினம் மாலையில் சந்தேக நபரை நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், நீதிபதி இளஞ்செழியனின் வாகனச் சாரதி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சம்பவத்தின் போது அங்கு தரித்து நின்ற உந்துருளியின் உரிமையாளர்கள் ஆகியோர் சந்தேக நபரை அடையாளங்காட்டியுள்ளனர்.

Related posts: