நல்லாட்சியினரால் தமிழர்களுக்கு என்ன பலன் கிட்டியது? – நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கேள்வி

Thursday, November 19th, 2020

நல்லாட்சி அரசில் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு சாதகமான விடயத்தை முடிந்தால் கூறுங்கள் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் பகிரங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் நல்லாட்சி அரசை ஆட்சிக்கு கொண்டுவர தமிழ் மக்கள் பெருமளவில் பங்களித்தாலும் அவர்களுக்கு என்ன கிடைத்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் –

கொரோனா, யுத்தம், எரிபொருள் பிரச்சினை எதுவுமின்றிதான் 2015 இல் நாட்டை நல்லாட்சி அரசுக்கு மஹிந்த ராஜபக்ஷ கையளித்திருந்தார். ஆனால் ஆகஸ்டில் நடந்த தேர்தலில் 104 எம்.பிகள் தான் அவர்களுக்கு கிடைத்தது.

ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தேர்தலை வென்றார். அப்படியானால் யார் பெயில்? நாமா அவர்களா? இன்னும் சில ஆண்டுகளில் உலகில் முன்னேற்றகரமான நாடாக எமது நாடு அபிவிருத்தி காணும்.

மேலும் 1,000 ரூபா சம்பள உயர்வு குறித்து வேலுகுமார் பேசினார். 2015 தேர்தலில் தமிழ் மக்கள் 80 -, 90 வீதம் சில பகுதிகளில் அதனையும் விட அதிக வாக்குகள் அளிக்கப்பட்டன. நல்லாட்சி அரசினால் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு சலுகையை கூறமுடியுமா. 5 வருடத்தில் என்ன கிடைத்தது? நல்லாட்சியை உருவாக்க பங்களித்ததால் என்ன கிடைத்தது? என்று காட்டுங்கள். ஒரு தொழிலாவது வழங்கப்பட்டதா?

தமிழ் மக்களுக்கு நாம் செய்த அபிவிருத்தியை ஒருபக்கம் வைத்தாலும் பாடசாலை செல்லும் மாணவர்களின் கழுத்தில் இடப்பட்ட சயனைட் குப்பியை அகற்றியது யார்?. யுத்த அச்சமின்றி நிம்மதியாக வாழும் சூழலை யார் ஏற்படுத்தினார்கள்? என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: