நம்பிக்கையில்லா தீர்மானத்தை என் கையில் திணித்துவிட்டனராம் – சீ.வீ.கே

Wednesday, July 12th, 2017

”எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் கையில் சிங்கக் கொடியை புகுத்தியதைப் போன்று வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை என் கையில் திணித்துவிட்டார்கள்” என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ். நீர்வேலி ஸ்ரீமுருகன் மாதர் சங்க மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளித்த தினத்தன்று மாலை தான் கட்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் தயாரிக்கப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டு அதில் தன்னுடைய பெயரை முதலாவதாக குறிப்பிட்டும் முடிக்கப்பட்டிருந்ததென குறிப்பிட்ட அவைத்தலைவர் சிவஞானம் இவ்விடயத்திலிருந்து விலகி நிற்கவே தான் விரும்பியதாகவும் எனினும் அதற்கான சூழ்நிலை ஏற்படவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஆளுநர் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் நம்பிக்கையில்லலா தீர்மானம் அடங்கிய கோப்பை தன்னிடம் தந்தபோது தான் அதனை ஏற்க மறுத்ததாகவும் பின்னர் ஆளுநர் அலுவலகத்திற்குள் சென்றபோது யாரோ தனது கையில் அந்த கோப்பை திணித்துவிட்டார்கள் என்றும் அது யாரென தனக்கு தெரியாதென்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இக்கட்டான சூழ்நிலையில் கட்சியை காட்டிக்கொடுக்கவோ சண்டைப் பிடிக்கவோ விரும்பாமல் மிகுந்த வருத்தத்துடனேயே குறித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளுநரிடம் கையளித்ததாக அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: