நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்வோம் – இதுவே எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழியாகும் – பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டு!

தேர்தலை எதிர்பார்த்து எந்தவொரு விடயமும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. நாம் அந்த மோசடி செயலை மக்களுக்கு செய்யவும் மாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தின்போது, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விவாதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் – இந்த வரவு செலவுத் திட்டத்தை நாம் முன்வைக்கும் போது 70 பில்லியன் ரூபாயை கொரோனா தொற்றுக்கென செலவிட்டிருந்தோம்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு இடம்பெறும் நாளவில் நாம் 82 பில்லியன் ரூபாயை கொவிட் ஒழிப்பிற்காக செலவிட்டுள்ளோம். டிசம்பராகும்போது அது 90 பில்லியனை விட அதிகமாகும். அதனால் இது போன்ற பாரிய சவால்களை ஏற்றுக்கொண்டு முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டமாக இதனை குறிப்பிட வேண்டும்.
நாம் உலகத்துடன் எந்தளவிற்கு பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர சரியான தருணம் தான் இது. உலகில் இடம்பெறும் விடயங்கள் அரசியல், பொருளாதாரம், சுகாதார அடிப்படையில் இடம்பெறும் விடயங்கள் எம்மை எந்தளவு பாதிக்கும் என்பதை புரிந்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இதுவாகும்.
நாம் நமது பொருளாதாரத்தை தேசிய மட்டத்தில் கட்டியெழுப்பியிருந்தால் இதுபோன்ற நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க கூடியதாயிருந்திருக்கும். அதுதான் கொவிட்-19 எமக்கு கற்பித்த பாடம். நாம் ஏற்கனவே இந்நிலையை புரிந்துக் கொண்டிருந்தோம்.
அதனாலேயே சுபீட்சத்தின் நோக்கு தேசிய பொருளாதாரம் குறித்தும், தேசிய விவசாய வளர்ச்சி தொடர்பிலும் எண்ணினோம். இந்த வரவு செலவுத் திட்டம் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
மற்றைய வரவு செலவுத் திட்டங்களின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுசெய்வதே முதன்மையாகும். எனினும் இந்த வரவு செலவுத் திட்டம் உள்ளூர் விவசாயிகள், உள்ளூர் தொழிலதிபர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஆகியோரை மேம்படுத்தி உலகை எதிர்கொள்ளக்கூடிய மற்றும் இதுபோன்ற பாதிப்புகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்வது நமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழியாகும். இவ்வளவு காலமும் ஒரு கிலோகிராம் நெல்லிற்கு 32 ரூபாயே செலுத்தப்பட்டது. நாம் அதனை 50 ரூபாய் வரை அதிகரித்தோம். உரத்தை இலவசமாக நிவாரணமாக பெற்றுக் கொடுத்தோம்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என விமர்சகர்கள் குற்றஞ்சாட்டினர். எனினும், நாம் ஒருபோதும் வெறுமனே பணத்தை செலவிடும் திட்டங்களை ஆரம்பிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|