நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்குப் பணிப்பு!
Friday, June 21st, 2024
பொருட்களின் விலைகள் குறைவதனால் கிடைக்கும் நன்மையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றி, துறைசார் மேற்பார்வைக் குழு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தலைமையில் கூடிய வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கம் ஒன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் பலவற்றின் விலைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் ஏற்பட்டுள்ள நன்மையைப் பொதுமக்களிடம் சேர்ப்பதற்கு வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேடமாக பகல் உணவுப் பொதிகள், சிற்றுண்டிகள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கட்டடத்துறைக்கான பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறையவில்லையென்றும் தெரிவித்தார். எனவே, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, விலைகளைக் கட்டுப்படுத்துவது அல்லது ஏதாவது முக்கியமான விடயங்கள் தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் விலைக் கட்டுபாடு தொடர்பான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்து ஒரு மாதகாலத்துக்குள் அது பற்றிய அறிக்கையைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|