நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, February 18th, 2022

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவையும், இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்கவினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – சீனா ஒரு பெரிய நாடாக இருந்த போதிலும் எந்த நாட்டையும் ஒருபோதும் ஆக்கிரமித்ததில்லை. அதேபோன்று தமது தாய்நாட்டை எந்த அந்நிய சக்திக்கும் அடிபணிய அனுமதிக்கவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம்’ சீனா ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் இலங்கையுடன் நட்புறவுடன் இருந்து வருகிறது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்துவது தமது எதிர்பார்ப்பும், பொறுப்புமாகும் எனவும்  பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது. சீனாவினால் ஒட்டுமொத்த ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது. சீனா தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்றது.  அதேபோன்று நாடுகளுக்கு இடையிலான நட்புறவுடன். சீனா நமது வரலாற்று நட்பு நாடு. அதை நான் இங்கே குறிப்பிட வேண்டும்.

சீனாவின் தற்போதைய ஜனாதிபதி சீ ஜின்பிங் எமது தனிப்பட்ட நண்பரும், அதேவேளை இலங்கையின் நல்ல நண்பரும் ஆவார். இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் அவர் எமக்கு உதவுகிறார்.

2012 ஆம் ஆண்டுமுதல் சீனா அதிபர் சீ ஜின்பிங் அவர்களின் வலுவான தலைமையின் கீழ் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சீனாவின் தலைவிதியை மாற்றியமைத்து, இன்று அனுபவிக்கும் வெற்றியை சீனாவுக்கு வழங்குவதற்கும் அவரது தலைமைத்துவம் முக்கிய காரணியாக இருந்தது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இல்லையெனில் இன்று நாம் காணும் சீனா இருந்திருக்காது என்றும் பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: