நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் புதிய கட்டுப்பாடுகளுடன் நீக்கப்பட வாய்ப்பு – துறைசார் தரப்பினருடன் ஆராயப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, September 15th, 2021

சில புதிய கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் வாரம் நாட்டை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக இராணுவத் தளபதியும் கொரோனா ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும்.

அத்துடன் நாட்டை திறப்பதற்கான பரிந்துரைகள் குறித்து இந்த வாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

குறித்த பரிந்துரைகளின் படி நாடு சில கட்டுப்பாடுகளுடன் திறக்க தீர்மானிக்கப்படும் என்றும், நாடு திறக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்துடன் அது செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை அமுலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: