நடவடிக்கை எடுக்கத் தவறினால் வடக்கின் அரச அலுவலகங்களை முடக்கப்படும் – மீனவ சங்கப் பிரதிநிதிகள் அறிவிப்பு!

Tuesday, February 1st, 2022

இந்திய மீனவர்களால் யாழ்ப்பாண மீனவர்கள் கொலை செய்யப்படுகின்றமை, மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை உட்பட்ட அத்துமீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் வடக்கின் அரச அலுவலகங்களை முடக்கத் தீர்மானித்துள்ளதாக மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவரை இந்திய மீனவர்கள் படகுகளால் மோதிப் படுகொலை செய்யப்பட்டமையின் தொடராக யாழ்ப்பாணத்தின் வடமராட்சி, வடமராட்சி கிழக்கு உட்பட்ட கரையோரப் பகுதிகளில் மீனவர்களின் போராட்டம் தீவிரம் பெற்றுள்ளது.

குறித்த பகுதிகளில் வீதிகள் முடக்கப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் பருத்தித்துறையில் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஒன்று கூடி சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர்.

அவற்றின் அடிப்படையில் –

இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த கடற்படையினர் உத்தரவாதம் வழங்கவேண்டும், அதேபோல கடற்றொழில் அமைச்சரும் வாக்குறுதி வழங்கவேண்டும்.

வாக்குறுதி வழங்கியும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் அடாவடி நடவடிக்கைகள் தொடர்ந்தால் தொழில் முடக்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும்,

அதேபோல பிரதேச செயலகங்கள், கச்சேரி உட்பட்ட அரச திணைக்களங்களை முடக்கிப் போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

000

Related posts: