நடளாவிய ரீதியில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசி – சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு!
Sunday, January 31st, 2021நாட்டில் நேற்றைய நாளில் 32,539 பேருக்கு ஒக்ஸ்ஃபோர்ட் எஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நேற்றிரவு 7.45 வரை குறித்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நேற்றுமுன்தினம், 5 ஆயிரத்து 286 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதன்படி, நாட்டில் இதுவரை 37 ஆயிரத்து 825 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் பொலிஸாருக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இன்று நாரஹேன்பிட்டியவிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையில் ஆரம்பமாகவுள்ளது என பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 113 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்றதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகைய்யா லதாகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 670, மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 400, கல்முனை பிராந்தியத்தில் 4 ஆயிரத்து 870, அம்பாறை பிராந்தியத்தில் 3 ஆயிரத்து 70 தடுப்பூசிகள் உட்பட 14 ஆயிரத்து 10 தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் வடக்கு மாகாண நேற்றைய முதல் நாளில் 2 ஆயிரத்து 997 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் சுகாதார தரப்பினருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
இந்த தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில் 9 ஆயிரத்து 944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றனர்.
மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பணியில் முதல் நாளான நேற்று 2 ஆயிரத்து 997 பேர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் ஆயிரத்து 586 பேருக்கும் கிளிநொச்சியில் 290 பேருக்கும் மன்னாரில் 448 பேருக்கும் வவுனியாவில் 360 பேருக்கும் முல்லைத்தீவில் 313 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|