நடமாடும் சேவை மூலமாக விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, May 25th, 2021

விவசாயிகளின் உற்பத்திகளை முடக்குவதற்கோ, நிறுத்துவதற்கோ அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் தமது உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அரசாங்கம் இதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும். நடமாடும் சேவை மூலமாக தொடர்ந்தும் விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கொவிட் நிலைமை குறித்தும், அத்தியாவசிய சேவைகளின் முன்னேற்றம் குறித்தும் மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தற்போது எந்த வெளிநாட்டு பயணிக்கும் இலங்கை வர சந்தர்ப்பம் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அங்கு குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் விமானம் மூலம் நாட்டுக்கு வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது இந்த தடை எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்த அமைச்சர்   இன்றையதினம் சில்லறைக் கடைகள், மருந்தகங்கள், மீன் ,இறைச்சி, பழவகை விற்பனை நிலையங்கள், பேக்கரி என்பவற்றை திறக்க முடியும் என்றும் ஆடை விற்பனை கடைகளை திறக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: