நகரசபையை எமது மக்களின் பேராதரவுடன் வென்றெடுப்போம் – ஈ.பி.டி.பியின் பருத்தித்துறை நகரசபை வேட்பாளர் சித்திரவடிவேலாயுதம்!

Wednesday, January 17th, 2018

பருத்தித்துறை நகரசபையை எமது மக்களின் பேராதரவுடன் வென்றெடுத்து நிச்சயம் நாம் பாரிய மாற்றத்தைக் கொண்டுவருவோம் என பருத்தித்துறை நகரசபை வேட்பாளர் சித்திரவடிவேலாயுதம் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் பருத்தித்துறை நகரசபையை வெற்றிகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அந்தச் சபையின் வளர்ச்சிக்கு முழுமையான பங்களிப்பை வழங்கவில்லை. இதன்காரணமாகவே அந்த சபையின் வளர்ச்சி என்பது இன்றுவரை மேம்படாத நிலையில் உள்ளது.

அந்தவகையில் பருத்தித்துறை நகர சபையை நாம் வெற்றிகொள்ளும் பட்சத்தில் அதன் சுத்தம் சுகாதாரத்தை மட்டுமன்றி நகரின் அழகையும் மேம்படுத்தி அதனூடாக ஒரு முழுமையான அபிவிருத்தியை நோக்கி நிச்சயம் நாம் கொண்டுசெல்வோம். அதற்கு கிடைக்கப்பெற்றுள்ள வரப்பிரசாதமாக மிகச் சிறந்த தலைவராக டக்ளஸ் தேவானந்தா இருக்கின்றார். அவருடைய கடந்தகால பணிகளை அனுபவத்தில் கொண்டு எதிர்காலத்தில் வளமுள்ளதானதொரு நகரசபையாக எமது பருத்தித்துறை நகரசபையை நிச்சயம் நாம் மாற்றுவோம் என்றும்  பருத்தித்துறை நகரசபை வேட்பாளர் சித்திரவடிவேலாயுதம் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கும்போது உங்களது ஆசைகள் எண்ணங்களை மக்கள் எமக்குத் தரும் ஆணையைக்கொண்டு நிச்சயம் நிறைவேற்றுவேன். நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்களை விட்டு ஓடியதும் கிடையாது ஓடப்போவதும் கிடையாது. கொடிய யுத்த காலத்திலும் யுத்தம் முடிவுற்ற காலத்திலம் சரி நான் மக்களுடன் நின்று மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்துவருகின்றேன்.

அந்தவகையில்தான் பருத்தித்துறை நகரசபையிலுள்ள தேவைப்பாடுகளை முன்னைய ஆட்சியளார்கள் முன்னெடுக்காதிருந்தாலும் கூட இந்த நகரசபையை நாம் வெற்றிகொள்ளும் பட்சத்தில்  நிச்சயம் அதனை அபிவிருத்தியால் கட்டியெழுப்புவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் வடமராட்சி தென்மராட்சி பிரதேசங்களின் ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரனும் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: