தோழர் சந்திரமோகனின் பூதவுடல் தீயுடன் சங்கமம்!
Friday, July 8th, 2016தான் கொண்ட கொள்கையில் இலட்சியப் பற்றுடன் வாழ்ந்து காட்டியவர் அமரர் தோழர் சந்திரமோகன் என ஈழவிடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர் கோவைநந்தன் தெரிவித்தார்
இன்றையதினம்(8) பொரளை இந்துமயானத்தில் நடைபெற்ற அமரர் தோழர் சந்திரமோகனின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கல் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் அவர் தனது இரங்கல் உரையில் – அரசியல், பொதுவாழ்வு, தனிப்பட்ட வாழ்வு, வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் சாதித்துக்காட்டியவர் தோழர் சந்திரமோகன் என்றும் அவரது ஆளுமையான பேச்சும் செயற்பாடுகளும் அனைவரையும் கவர்ந்திழுத்ததென்றும் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் இளைஞர் பேரவையை கட்டிவளர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன் அதன் உயர்மட்டக் குழுவின் உறுப்பினராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். தோழர் சந்திரமோகன் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலையை ஆத்மார்த்தமானதாக நேசித்ததுடன் அதற்காக முன்னின்றும் உழைத்தார்.
அனைத்து துறைகளிலும் தன்னை அடையாளப்படுத்தி பிரகாசித்துக்கொண்ட தோழர் சந்திரமோகன் தான்கொண்ட கொள்கையில் இலட்சிய பற்றுறுதியுடன் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்துகாட்டிய பெருமகன் என்றும் சுட்டிக்காட்டினார்.
இவ் இரங்கல் நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான தவராசா உரையாற்றுகையில் –
ஈழவிடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராக விளங்கிய தோழர் சந்திரமோகன் ஈழவிடுதலையை வலியுறுத்தும் பொருட்டு எரிமலை என்ற பத்திரிகையை அச்சிட்டு வெளியிடுவதில் மிக அக்கறையுடனும் முன்மாதிரியாகவும் விளங்கியவர்.
அரசியலில் மட்டுமன்றி வர்த்தகத்துறை போன்ற ஏனைய துறைகளிலும் தன்னை நிலைநிறுத்தி வாழ்ந்துகாட்டியவர். அத்துடன் ஈழ விடுதலைக்கான போராட்டத்திற்காக சிறைசென்று வந்தவர் என்றும் தெரிவித்தார்.
தோழர் சந்திரமோகனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உரையாற்றியபோது –
ஈழப்போராட்டத்தில் மூத்த போராளியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட தோழர் சந்திரமோகன் இறுதிவரை நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கொண்டுவரவேண்டும் என்பதில் தீவிரமாகவும் அக்கறையுடனும் உழைத்தவர்.
அத்துடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மோம்பாட்டுக்காக தனது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்ட அவர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அருகிருந்து சிறந்த ஆலோசகராகவும் இறுதிவரை உழைத்தவர் தோழர் சந்திரமோகன் என்று தெரிவித்தார்.
முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தனது அஞ்சலி உரையில் – நுண்ணிய கருமம் எண்ணித்துணிக என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்துகாட்டியவர் தோழர் சந்திரமோகன். சிறந்த ஆளுமை மிக்க இவர் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அமைவதற்கு அடித்தளமாகவும் இருந்தவர் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையின் கீழ் நீண்டகாலமாக செயற்பட்டுவந்தவர் தோழர் சந்திரமோகன் என்றும் சுட்டிக்காட்டினார்.
அடுத்து இரங்கலுரையாற்றுவதற்காக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைக்கப்பட்டபோது அவர் தனது உற்ற தோழனும் தான் மிகவும் நேசித்தவர்களில் ஒருவருமான தோழர் சந்திரமோகன் அவர்களின் இழப்பையும் அது அவருக்கு ஏற்படுத்திய இடைவெளியையும் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை நீண்டநேரம் இறுக்கமான மௌனத்தினூடாக உணர்வுகளாக வெளிப்படுத்தினார்.
வார்த்தைகளால் தனது தோழனின் வாழ்வையும் பிரிவையும் வெளிப்படுத்த முடியாத மௌனத்தை மட்டுமே தனது இரங்கல் செய்தியாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பகிர்ந்துகொண்டார்.
டக்ளஸ் தேவானந்தாவின் இறுக்கமான மௌனத்தின் இறுதியில் தோழர் சந்திரமோகனது மருமகன் அஞ்சலி செலுத்தவந்த அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சமயக் கிரியைகளைத் தொடர்ந்து தோழர் சந்திரமோகனது பூதவுடலை தாங்கிய ஊர்தி ஜெயரட்ணம் மலர்ச்சாலையிலிருந்து ஊர்வலமாக பொரளை இந்து மயானத்திற்கு சென்றது.
அங்கு நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வுகளை தொடர்ந்து பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
தோழர் சந்திரமோகனின் இறுதி நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கல்விமான்கள் வர்த்தகர்கள் உற்றார் உறவினர் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|