தொழிலாளர்கள் விடயத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளோம் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவிப்பு!

Monday, January 3rd, 2022

ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தை நோக்கு திட்டத்திற்கு அமைய அரச மற்றும் தனியார் துறையில் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை ஏற்படுத்தல் நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கின்ற தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தி பல விடயங்களை தொழில் அமைச்சு என்ற வகையில் 2021 ஆம் ஆண்டு பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவற்றின் சிறந்த பலன்களை தற்பொழுதும் தொழிலாளர்கள் அனுபவித்து வருவதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் தொழில் அமைச்சு மேற்கொண்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துகின்ற பொழுதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் –  தேசிய ரீதியில் ஆகக் குறைந்த சம்பளமாக இருந்த 10,000 ரூபாவை 12,500 ரூபாய் வரை அதிகரித்துள்ளமை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆக்க குறைந்த சம்பளமாக நாள் சம்பளம் 1,000 ரூபாவாக அதிகரித்துள்ளமை, தனியார் துறையினரின் ஓய்வு காலத்தை 60 வயது வரை அதிகரித்துள்ளமை, தொழிலை நிறைவு செய்கின்ற பொழுது வழங்கப்படுகின்ற 12 இலட்சத்தை 25 இலட்சம் வரை அதிகரித்துள்ளமை, தொழில் செய்கின்ற பொழுது ஏற்படுகின்ற விபத்துக்களின் பொழுது அல்லது அனர்த்தங்களின் பொழுது வழங்கப்படுகின்ற தொகையான 5 இலட்சத்தை 20 இலட்சம் வரை அதிகரித்துள்ளமை போன்ற விடயங்களை கடந்த வருடத்தில் பெற்றுக் கொடுத்தமை பாரிய ஒரு வெற்றியாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேநேரம் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலை முற்றாக நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் அதன் இலக்கை நோக்கி பயணிக்கும் முகமாகவும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு ஆகக் குறைந்த வயதாக குறிப்பிடப்பட்டிருந்த 14 வயதை தற்பொழுது 16 வரை அதிகரித்துள்ளமை, 18 வயதிற்கு குறைந்தவர்களை அபாயகரமான 71 தொழில்களில் இருந்து விடுவிப்பது தொடர்பாகவும் அவர்களை அந்த தொழிலில் ஈடுபடுத்துவது சட்டவிரோத குற்றம் என்பதையும் அறிவித்துள்ளோம். இதனை சர்வதேச ரீதியாக தொழில் ஸ்தாபனங்கள் வரவேற்றுள்ளன.

தொழிலாளர்களின் தொழில் பிணக்கு தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்த்து வைப்பதற்கும் அதற்கென மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களையும் தொழிலாளர் தீர்ப்பாயங்கள் ஊடாக அவர்களுக்கான நீதிமன்ற அதிகாரங்களை பெற்றுக் கொடுத்தல் தொழிலாளர்களின் நட்டஈடுகளை விரைவாக பெற்றுக் கொள்வதற்காக தொழில் நட்டஈட்டு ஆணையாளர் நியமித்தல் தொழில் தீர்ப்பாயங்களை ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் தொழிலாளர்களுக்கு கிடைத்த மாபெரும் சலுகைகளாகும்.

தொழில் இடைநிறுத்தம் ஒழுக்காற்று நடவடிக்கை என்பன தொடர்பாக ஏற்படுகின்ற பிணக்குகளை 3 மாதத்திற்குள் தீர்த்து வைப்பதற்கு தேவையான சட்டங்களை அறிமுகப்படுத்தல் தொழில் புரிகின்ற தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற முக்கிய விடயங்களாக கருத முடியும் என்பதை தொழிற்சங்கங்களும் ஏற்றுக் கொண்டுள்ளமை அதற்கு கிடைத்த வெற்றியாகும்.

கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு தொழிலாளர்களையும் தொழில் வழங்குநர்களையும் பாதுகாத்து கொள்ளும் முகமாக நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் முன் கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற கொவிட் தொற்று தொடர்பாக கூட்டங்கிளில் கலந்துரையாடியமை அது தொடர்பாக தேசிய தொழில் சட்ட வல்லுனர்கள் ஆலோசகர்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டு முன் கொண்டு சென்றமை எனது தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: