தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரி நீக்கப்படும்!

Thursday, September 22nd, 2016

தொலைபேசிக் கட்டணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திறன்பேசி (smartphone) வழியாக மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான கட்டண வரியை, முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இணையம் மூலமாக அழைப்புக்களை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொடுக்கவுள்ளதாகவும் இதற்கான கட்டண அறவீடு, நிதி ஒதுக்கீடு தொடர்பான யோசனையை, எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திலும் உள்ளவாங்க முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையலுவலகத்தில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ‘அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வற் அதிகரிப்பினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மைதான். இதற்கான தீர்வொன்றை விரைவில் கொண்டுவருவதற்கு நிதியமைச்சர் ரவி கருநாணாயக்கவுடன் கலந்துரையாடி வருகிறோம்.

இதற்கமைய, எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு நிதி ஒதுக்க கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது. இதில் அலைபேசிக் கட்டணங்களில் அலகுகளுக்காக விதிக்கப்படும் வரியை நீக்க நிதி அமைச்சரிடம் கலந்துரையாடி வருகிறோம். குறிப்பாக திறன்பேசிகளின் (smartphone) அழைப்புக் கட்டணங்களுக்கு விதிக்கப்படும் வரியை முழுமையாக நீக்க ஆலோசித்துவருகிறோம் என்றார்.

மேலும், உலக நாடுகளில் தற்போது அலைபேசிகளில், காணொளி வழியான அழைப்புகள் மூலமே தொடர்பாடல் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையை பொறுத்தமட்டில், அதிகமாக குரல் வழி அழைப்பின் மூலமே தொடர்பாடல் முன்னெடுக்கப்டுகின்றது.

விரைவில் இலங்கையில் இணையம் மூலமான காணொளி வழி அழைப்புக்களை மேற்கொள்வதற்கான வசதிகளை மேலும் விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திறன்பேசி அழைப்பு கட்டணங்களுக்கான வரியை முற்றுமுழுதாக நீக்கப்படுமானால், இந்த முறைமை பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது’ எனவும் குறிப்பிட்டார்.

harin-fernando-720x480

Related posts: