தொடரும் மாணவர் துஷ்பிரயோகங்கள்:  அதிருப்தியை வெளியிட்ட நீதிபதி!

Friday, July 1st, 2016

அண்மைய காலங்களில் வடக்கில் அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தனது ஆதங்கத்தை வெளியிட்டள்ளார். கடவுளாக மதிக்கப்படுகின்ற ஆசிரியர்கள் சிலர் , காமுகர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட காமுகர்களை ஆசிரியர்கள் என்ற ஸ்தானத்தில் வைத்துப் பூஜிக்க முடியாது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வரணிப் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சம்பவத்தை மூடி மறைத்தமை மற்றும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவிடாது தடுத்தமை தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் புதன்கிழமை (29) எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய அப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மூவரை 50 ஆயிரம் ரூபாய் பிணையில் நீதவான் விடுதலை செய்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த நீதவான்-

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அதனால்தான் ஆசிரியர்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுகின்றனர். ஆனால், கடவுளாக மதிக்கப்படுகின்ற ஆசிரியர்கள் சிலர் காமுகர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட காமுகர்களை ஆசிரியர்கள் என்ற ஸ்தானத்தில் வைத்துப் பூஜிக்க முடியாது.

ஒவ்வொரு பிள்ளைகளின் மெய்ப்பாதுகாவலன் அந்தந்த இடங்களில் அமைந்துள்ள நீதிமன்றங்கள் ஆகும். இந் நீதிமன்றின் தலையாய கடமை, அந்தப் பிள்ளைகளை இப்பேற்பட்ட காமுகர்களிடம் இருந்து பாதுகாப்பது ஆகும். இக் காமுகர்களை வெளியே கொண்டு வராது சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி வாழ்வதற்காக எவராது துணைபோவார்களானால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இவ்வாறு துணைபோகின்றவர்களினால் இத்தகைய காமுகர்கள் தமது லீலைகளை மென்மேலும் புரிவதுடன், இதனால் பள்ளி மாணவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்ற எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றது’ என்றார்.

இதுபோன்று பாலியல் சேஷ்டையில் ஈடுபடுகின்ற காமுகர்களைப்  பாடசாலையில் பல ஆசிரியர்கள் இனங்கண்டும், பாரமுகமாக நடந்து கொள்வதனால் தான் காமுகர்களின் செயற்பாடுகள் அதிகரிக்கக் காரணமாகின்றது.

பாடசாலை நேரங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது அதிபர், ஆசிரியர்களின் கைகளில் உள்ளது. அவ்வாறு இருக்கும் பொழுது அந்தப் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்றுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு உடையவர்களும் அவர்களே.

மேற்கூறிய விடயங்களைப் பாரமுகமாகக் கொண்டு செயற்படுவதும், காமுகர்களின் பாலியல் சேஷ்டைக்குத் துணை போவதாகவே கருத முடியும்.

எனவே, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் உயரிய நன்மை கருதி, பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மென்மேலும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இதுபோன்று வேறு பல மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் சட்டத்தின் முன், அவ்வாறான குற்றம் இழைப்பவர்கள் அல்லது இழைக்க முற்படுபவர்களை கொண்டு வரவேண்டும்’ எனவும் தெரிவித்தார்.

Related posts: