தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டில் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, June 6th, 2021

நாட்டில் தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலையால் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும் கடந்த மே மாதத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்,

எனினும் இவர்களில் மூன்றில் ஒரு வீதமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் எதிர்வரும் நாட்களில் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அதேநேரம் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தினால் நீர் தேங்குவதன் காரணமாக எதிர்வரும் ஒரு மாதத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 7 ஆயிரத்து 873 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: