தேர்தல் வேண்டாம் என கோசம் எழுப்பும் விசித்திரமான எதிர்க்கட்சி இலங்கையில் மட்டும்தான் இருக்கின்றது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, May 14th, 2020

நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும் தேர்தல் வேண்டாம் என கோசம் எழுப்பும் விசித்திரமான எதிர்க்கட்சியை இலங்கையில் காண முடிகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து தென்னிலங்கை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் –

பொதுவாக தேர்தல் வேண்டும் என குரல் கொடுப்பதே எதிர்க்கட்சிகளின் தேவைப்பாடாக அமைந்துள்ளது. ஆனால் தேர்தல் வேண்டாம் என பீதியில் அஞ்சும் எதிர்க்கட்சி குறித்து மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. இன்று ஊடகங்கள் மிகவும் பலமானவை. தேர்தல் நடத்துவதற்கு ஊடகங்களின் ஊடாக வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியும்.

கடந்த காலங்களில் சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்களின் மூலம் பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்களுக்கு பல்வேறு மாற்று வழிகள் உண்டு, அதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

வேட்பாளர்களுடன் ஒன்றிரண்டு பேரை அழைத்துக்கொண்டு வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய நல்ல சந்தர்ப்பம் உண்டு. சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் தேர்தல் கூட்டங்களை நடத்த முடியும்.

வாக்களிக்கும் போதும் பாதுகாப்பான வழிமுறையில் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல சந்தர்ப்பம் உண்டு. தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதிமொழி வழங்காது இந்த எதிர்க்கட்சிகள் தேர்தலைக் கண்டு அஞ்சி பீதியில் நடுங்குகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: