தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

Saturday, March 4th, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

இந்நிலையில் அன்றையதினம் ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சக மா அதிபர், காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில், இன்றையதினம் அவர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் அடுத்த வாரம் மீண்டும் கூடி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தலைமையில் நேற்று இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான நிதி, வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் மற்றும் தேர்தல் நடத்தப்படும் தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

எனினும் நேற்றையதினம் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படாத நிலையில், அடுத்த வாரம் மீண்டும் கூடி தீர்மானம் எட்டப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, நிதியமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்து எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் நிலையே இருப்பதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறையை மாற்றுவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதியின்றி ஒத்திவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் மீண்டும் வேட்புமனு கோருவதற்கே அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: