தேர்தல் ஒத்திவைப்புக்கு நாம் பொறுப்பல்ல! – மஹிந்த தேசப்பிரிய

Friday, June 3rd, 2016

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எந்த நேரத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் நடத்த முடியும் எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்புக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பல்ல எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்துக்கும் ஒதுக்கப்பட்ட வட்டாரங்களின் எண்ணிக்கையை வர்த்தமானி அறிவித்தல் மூலம் உறுதிப்படுத்தப்படும் வரை தேர்தல்கள் நடத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

நாவலப்பிட்டியில் நடந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில், வாக்குரிமை மூலம் மக்களின் இறைமையை உறுதிப்படுத்துவதில், தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும்படி பிரகடனக்கடுத்துமாறு, உயர்நீதிமன்றத்தில் ஓர் அடிப்படை உரிமைகள் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றின் தீர்ப்புக்கமைய அல்லது வட்டார நிர்ணயம் முடிந்த பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலை நடத்தும் என அவர் கூறினார்.

ஆண்கள் அளவுக்கு பெண்களுக்கும் வாக்குரிமை உள்ளதாயினும், நாடாளுமன்றத்தில் 5 சதவீதம் மட்டுமே பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனை அதிகரிக்க, நாடாளுமன்றத்தில் சட்டமொன்று இயற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தான் கோரிநிற்பதாகவும் அவர் கூறினார்

Related posts: