தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!

Friday, November 15th, 2019

ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், வவுனியா மன்னார் மாவட்டங்களில் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் காவலரன்கள் குறித்து உடனடி விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு சில மணிநேரங்களே உள்ள நிலையில், சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக எந்தவொரு பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்கிற கடுமையான உத்தரவை அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வழங்கியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் பகல் நடைபெற்றது.

இதில் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, கோத்தபாய ராஜபக்ச, அநுரகுமார திஸாநாயக்க, ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவில்லை. எனினும் அவர்கள் தரப்பிலிருந்து பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பிரசன்னமாகியிருந்தனர்.

35 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடுகின்ற அதேவேளை , இலங்கை வரலாற்றில் 26 அங்குல நீளத்தைக்கொண்ட வாக்களார் சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு காலை 7 மணிமுதல் 4 மணிவரை வாக்குப் பதிவுகள் நடத்தப்படுவது வழக்கம் என்றாலும், இம்முறை இறுதி நேரமாக 05 மணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின்போது, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டுவந்த இரண்டு வரிசைகள் இம்முறை மூன்று வரிசைகளாக மாற்றப்படவுள்ளதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள மௌனக்காலத்தில் எந்தவொரு பிரசாரங்கள், சமூக வலைத்தளங்கள் ஊடான விளம்பரங்கள் என்பன நடத்தக்கூடாது என்கிற கடுமையான உத்தரவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சகல வேட்பாளர்களுக்கும் வழங்கியிருக்கின்றார்.

இதேவேளை, வடமாகாணத்தின் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் வழமைக்கு மாறாக தற்போது அதிகளவான இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் திரும்பியுள்ளது.

Related posts: