தேர்தலை ஒத்திவைக்குமாறு IMF பரிந்துரை செய்யவில்லை – வரிச் சீர்திருத்தம் மிக அவசியம் – சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தெரிவிப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு பரிந்துரை செய்யவில்லையென சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாக்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன், உள்ளூராட்சி சபை தேர்தல் செயன்முறைகளில் தலையிடவும் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட கடன் வசதி வழங்க IMF செயற்குழு அனுமதி வழங்கியமை தொடர்பில் இன்றையதினம் (21) முற்பகல் வொஷிங்டனிலிருந்து ஒன்லைன் மூலம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவருடன், சர்வதேச நாணயநிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானியான பீட்டர் புருவரும் கருத்து வெளியிட்டிருந்தார். இச்சந்திப்பில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.
அத்துடன் வரிச் சீர்திருத்தம் மிக அவசியமெனவும், வரிகளை உரிய வகையில் திட்டமிட்டு அறவிடுவதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இலங்கையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக அகற்றப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கை தனது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மூலோபாயம் குறித்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை கடுமையான பொருளாதார சமூக சவால்களை எதிர்கொண்டுள்ளது. உயர்ந்த பணவீக்கத்திற்கு மத்தியில் குறைவடைந்துள்ள வெளிநாட்டு நாணய கையிருப்பு காரணமாக, நாட்டின் நிதித்துறை பலவீனமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்புகளை கடுமையான சீர்திருத்தங்களிற்கு உட்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள அவர், இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அச்சீர்திருத்தங்களை விரைவாகவும் உரிய நேரத்திலும் முன்னெடுப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|