தேர்தலைப் பிற்போடாதீர்கள் – அரசிடம் கோருகின்றது கபே அமைப்பு!

Saturday, February 9th, 2019

மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு தொடர்ந்தும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டாமென கபே அமைப்பு அரசிடம் கோரியுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் பிற்போடுகின்றமை குறித்து கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கின் இதனைக் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை குறித்து பலரும் விமர்சனம் செய்கின்றமை பெரும் கவலையளிக்கின்றது. ஆகையால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான தீர்மானங்களை தள்ளிவிடாமல் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தேசிய அரசியலில் காணப்படுகின்ற பின்னடைவுகள் மற்றும் சிக்கல்களைக் காரணம் காட்டி தேர்தலைப் பிற்போடுவது ஜனநாயக விரோதச் செயற்பாடாகும்.

தற்போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தல் குறித்து வித்தியாசமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாகத் தேர்தலைப் பிற்போடும் புதிய உபாயங்களையே அவர்கள் கையாள்கின்றமையைத் தொடர்ந்து அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ஒரே கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், மாகாண சபைத் தேர்தலை தவிர்த்து ஜனாதிபதி தேர்தலை வலியுறுத்துவதை ஊடகங்களின் ஊடாக அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணிக்கின்றமையால் 6 மாகாணங்களுக்கான மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து இல்லாமல் இருக்கின்றனர்.

அதாவது அந்த 6 மாகாணத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் 262 பேரின் சேவையை 6 ஆளுநர் மாத்திரமே மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

Related posts: