தேசிய பாடசாலை அதிபர் பதவி வெற்றிடங்கள் எப்போது  நிரப்பப்படும்? – கல்வி அமைச்சரிடம் கோரிக்கை!

Thursday, June 7th, 2018

நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாகக் காணப்படும் அதன் அதிபர் பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லையென கல்வித்துறைசார தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

நாட்டில் 350 இற்கும் மேற்பட்ட தேசிய பாடசாலைகள் இருந்த போதிலும் 270 ற்கும் மேற்பட்ட தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லையெனவும் இது தொடர்பாக உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டுமென கல்வித்துறைசார் தொழிற்சங்கங்கள் கடந்த 3 ஆண்டுகளாகக் கோரிவந்தன.

இந்நிலையில் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் இது தொடர்பாக கல்வியமைச்சரிடம் கேள்வியெழுப்பிய போது தமிழ், சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் இதற்கான விண்ணப்பம் கோரப்படுமெனவும் இதற்கான அனுமதியை அரச சேவைகள் வழங்கியுள்ளதாகவும் நாட்டின் உயரிய சபையில் வாக்குறுதியளித்திருந்தார்.

எனினும் கல்வி அமைச்சர் வாக்குறுதியளித்தவாறு எதுவும் நடைபெறவில்லை. தகுதியான நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படாமை காரணமாக தேசிய பாடசாலைகளின் கல்வித்தரம் வீழ்ச்சியடைந்து செல்வதுடன் பாடசாலைகளில் நிர்வாக சீர்கேடுகளும் ஒழுங்கீனங்களும் இடம்பெற்று வருகின்றன.

Related posts: