தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!
Tuesday, February 14th, 2017தேசிய நல்லிணக்கம் என்பது வெற்றுப் பேச்சுக்களாலோ அன்றி உரிமைகளையும் உணர்வுகளையும் விட்டுக்கொடுத்து சரணாகதி அரசியல் செய்வதோ அல்ல. அது சகோதர இன மக்களிடமும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற பிரதிநிதிகளிடமும் எமது இனத்திற்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை எடுத்துக்கூறி ஒரு புரிந்துணர்வு கொண்ட இணக்கப்பபாட்டை தோற்றுவித்து அதனூடாக உருவாக்கிக்கொள்ளும் ஒரு நிலையான இணக்கப்பாடே தேசிய நல்லிணக்கமாகும்.
இதை நாம் ஜனநாயக வழிமுறையில் காலடி எடுத்துவைத்த காலம்முதல் இன்றுவரை வலியுறுத்தி வந்ததுடன் அதில் கணிசமான அளவு வெற்றியையும் கண்டிருக்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக க் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற நல்லூர் பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் வரையப்பட்ட சோல்பெரி அரசியல் யாப்பிலிருந்து 1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகள் வரை தமிழ் பேசும் மக்களது உணர்வுகளை உணர்த்தும் வகையான அரசியல் அபிலாசைகளோ அன்றி கருத்துக்களோ உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
அன்றைய நாட்களில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புக்களில் இனங்களை பிரதிபலிக்கும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட்டிருந்தால் தமிழ் பேசும் மக்கள் இரண்டாம் தரப் பிரையைகளாக இருக்கவேண்டிய நிலை தோன்றியிருக்காது என்பதுடன் பெரும் அவலங்களையும் மாறா வடுக்களையும் சந்திக்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருக்காது.
ஆனால் தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றம், அரசியல் அமைப்பு நிர்ணய சபையாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சபையை வழிநடத்துவதற்காக ஒரு வழிநடத்தல் குழுவும் அதற்கான உபகுழுக்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது வரவேற்கத்தக்க சமிக்ஞைதான்.
இருந்தும் இதிலும் சில தடைகள் இருக்கின்றன. இருக்கும் தடைகளை தாண்டி புதிய அரசியல் யாப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்படுமானால் அது எமது இனத்திற்கு கிடைக்கும் மாபெரும் அரசியல் உரிமை வெற்றியாகும்.
நாம் இலங்கை அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதனை முன்னிறுத்தி எமது அரசியல் இலக்கை அடைய முடியும் என்றே நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.
அத்துடன் இது இலங்கை அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயம் என்பதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறவேண்டும் என்ற தடையையோ அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டும் என்ற நிர்ப்பந்தமோ இருக்காது.
ஆகவே கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு இன்று உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியல் யாப்பில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் உள்வாங்கப்படவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும் ஆகவே 13 அவது திருத்தச்சட்ட அரசியல் வழிமுறையை நாம் ஏற்றுக்கொண்டே மறுபுறத்தில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தையும் ஆதரித்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா.வேலும்மயிலும் குகேந்திரன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்), கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின், கட்சியின் அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன், உடனிருந்தனர்.
Related posts:
ஊடகங்கள் காரணமாகவே குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது - பொலிஸ் மா அதிபர்...
2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி அடுத்த மாதம்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய விஷேட குழு நியமனம் !
|
|
தவறுகளை மறைக்கவோ தப்பிக்கொள்ளவோ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டுச் சேரவில்லை - ஈ.பி.டி.பி.
எதிர்வரும் திங்கள்முதல் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கிளினிக் சேவைகள் புதிய இடத்தில் - பணிப்பாளர்...
கியூபாவில் நடைபெறவுள்ள க்ரூப் ஒப் 77 ப்ளஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிர...