தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதியில் தாமதம் – தெரிவாகிய மாணவர்கள் குற்றச்சாட்டு!
Monday, September 18th, 2023தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதி கடந்த ஓகஸ்ட் 31 க்கு முன்னர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதும், அதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை என கல்வியியல் கல்லூரிக்கு தெரிவாகிய மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், “தேசிய கல்வியியல் கல்லூரிகளின் அனுமதிக்காக 2019/2020 ஆண்டுகளில் உயர் தரத்தில் தோற்றியவர்கள் 2023 ம் ஆண்டு 1 ஆம் , 2 ஆம் மாதங்களில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அதன்படி தெரிவு செய்யப்பட்ட 7,000 மாணவர்களின் பெயர் பட்டியல் 2023 ஜுலை மாதம் வெளியாகியது.
பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஓகஸ்ட் 31 க்கு முன்னர் நிறைவு செய்யுமாறு கல்வி அமைச்சின் செயலாளர், கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறு அறிவித்த போதிலும், இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் அதிகாரிகள் (கல்லூரி விரிவுரையாளர்கள்) சில கோரிக்கைகளை கல்வி அமைச்சிடம் முன்வைத்துத் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் முக்கியமாக சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கல்வி அமைச்சின் அறிவித்தல்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் கல்வியியல் கல்லூரிக்கு தெரிவாகிய மாணவர்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.
குறிப்பாக கல்வியியல் கல்லூரி கல்வியை நிறைவு செய்து வெளியேறும் போது 25, 26 வயதை எட்டுவதோடு, மாணவர்களை பதிவு செய்வது தொடர்பாக முறையான அறிவித்தல்கள் இல்லாமையால் பலர் தமது தொழில்களை கைவிட்டும், பலர் தொழில்களுக்கு செல்ல முடியாமல் இருப்பதாலும் குடும்பத்தில் பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மாணவர்களின் மன நிலையை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு மெய்நிகர் (ஒன்லைன்) தொழினுட்பம் ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வியியல் கல்லூரிக்கு தெரிவாகிய மாணவர்கள் கோரிக்கை விடுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|