தேசியவாதத்தைப் பேசி வாக்குகளை அபகரித்தவர்களால் மக்களுக்கு எதுவித நன்மைகளும் கிடைக்கப்பெறவில்லை – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர்!

கடந்த காலங்களில் தேசியவாதத்தைப் பேசி மக்களின் வாக்குகளை அபகரித்தவர்களால் மக்களுக்கு எதுவித நன்மைகளும் கிடைக்கப்பெறவில்லை. அதுபோலவே தீவிரவாதத்தைப் பேசிக்கொண்டிருப்பவர்களாலும் எமது மக்களுக்கு ஒருபோதும் எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாதென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமைத்துவம் மற்றும் அவரது வழிகாட்டல் எமக்குப் பக்கபலமாக இருந்துவரும் நிலையில் சவால்களையும் எதிர்ப்புக்களையும் சந்தித்திருந்த போதிலும் அவற்றை எதிர்கொண்டு முடிந்தளவிலான மக்கள் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.
எதிர்காலங்களிலும் தேசியவாதம் பேசுவோரும் தீவிரவாதம் பேசுவோரும் உங்களிடம் வாக்கு கேட்க வருவார்கள். அப்போது மக்களாகிய நீங்கள் அவர்களது உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் உசுப்பேற்றல்களுக்கும் இடம் கொடுக்காது நடைமுறை யதார்த்தமான விடயங்கள் தொடர்பில் நன்கு ஆராய்ந்து சரியான அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் பல்வேறு தேவைப்பாடுகளுடன் இருக்கும் உங்களின் பிரச்சினைகளுக்கு தகுந்த முறையில் தேர்வுகளைப் பெற்றுத்தர முடியும். அந்த வகையில் நாம் என்றும் மக்களுடன் நின்று மக்களுக்கான பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம் என்றும் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேற்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன் உடனிருந்தார்.
Related posts:
|
|