தேசியம் கதைப்பவர்கள் மக்கள் நலன்களில் அக்கறை காட்டாதது ஏன் – யாழ்.மாநகர சபை அமர்வில் றெமீடியஸ் கேள்வி!

Wednesday, November 6th, 2019


 முதல்வர் இல்லாத நேரத்தில் அதன் அதிகாரத்தை பிரதி மேயருக்கு வழங்கியதன் அடிப்படையில் தீபாவளி பண்டிகை கடையை கொடுத்தமையானது மனிதாபிமான தற்துணிவுடன் செய்த விடயமாகுமென்பதுடன் நியாயமானது என்றும் அவரை இப்பணம் கட்ட சொல்வது நியாயமில்லை என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலஞ்சல் ஊழல் குழுவின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான ஜெயசீலன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட ஊழல் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையினை அதேகட்சியைச் சேர்ந்த பத்மமுரளி இப்பண்டிகைக் கடையை யாழ். மாநகர பிரதிமுதல்வரே வழங்கியிருந்தார்.

இந்நிலையில் சபையின் அனுமதியின்றி எவ்வாறு கடையை வழங்கலாம் என்று கேள்வி எழுப்பியிருந்ததுடன் குறித்த கடைக்கான வாடகையை பிரதிமுதல்வரே சபைக்கு செலுத்த வேண்டுமென வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ் முதல்வர் நாட்டில் இல்லாத நேரத்தில் அதன் அதிகாரத்தை பிரதி முதல்வரிடம் வழங்கியிருந்தார். இந்த செயற்பாடானது மனிதாபிமானத்துடனும் தற்துணிவுடனும் செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில், பிரதிமுதல்வரை இப்பணத்தை சபைக்கு செலுத்த சொல்லுவது நியாயமில்லை. அதுமாத்திரமன்று முன்னைநாள் போராளி; ஒருவரின் மனைவிக்கு குறித்த கடை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாங்கள் தேசியம் கதைக்கின்றோம் சபையில் அவர்களுக்குதான் முன்னுரிமையும் என்கின்றோம். ஆனால், தேசியம் கதைத்து அரசியலுக்குள் வந்துவிட்டு இப்போது உங்களது தேசியம் எங்கே என வினா எழுப்பியதுடன், சபையில் இப்படி குதர்க்கம் கதைப்பது தவறு என்றும் றெமீடியஸ் சுட்டிக்காட்டினார். அத்துடன் பிரதிமுதல்வர் இவ்வாறு மனிதாபிமான முறையில் செய்ததையிட்டு அவருக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.