தேங்காய் மட்டைகளைக் கொள்வனவு செய்வதற்குத் தனியார் நிறுவனம்!

Thursday, June 21st, 2018

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேங்காய் மட்டைகளை கொள்வனவு செய்வதற்கு தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய தென்னை பயிர்ச் செய்கை சபை தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

யாழ்ப்பாணத்தில் தென்னைச் செய்கையாளர்கள் தேங்காய் உரித்தவுடன் மட்டைகளை பயனுள்ள விதத்தில் பயன்படுத்தாமல் வீசி எறிகின்றனர். தேங்காய் மட்டைகளை மரத்துக்கு கீழ் ஒரு வரிசையில் அடுக்கி பாத்தி கட்டுவதன் மூலம் நீரைச் சேமித்து வைக்க முடியும். ஆனால் தேங்காய் மட்டைகள் வீண் செய்யப்படுகின்றன.

இது தவிர தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் இந்த மட்டைகளை நியாயமற்ற விலையில் கொள்வனவு செய்து அவர்களின் பிரதேசத்தில் தொழிற்சாலைகளை அமைத்து வருவாய்களைத் தேடிக்கொள்கின்றனர்.

ஆகவே எமது பிரதேச மக்கள் பயன் அடையும் வகையில் இந்த தேங்காய் மட்டைகளை கொள்வனவு செய்து வேலை வாய்ப்பை வழங்க புலம் பெயர் தமிழர்கள் கொண்ட நிறுவனம் முன்வந்துள்ளது. இது தொடர்பில் உரிய சங்கங்களுடன் கலந்துரையாடப்பட்டது.

உணாவில் மேற்கு, குடமியன், எழுதுமட்டுவாழ் ஆகிய பிரதேசத்தில் ஆரம்ப கட்டமாக இந்த தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் சேகரிப்பு நடைபெறவுள்ளது.

தேங்காய் மட்டை 2 ரூபா 50 சதம் முதல் தேங்காய் ஒன்று 50 ரூபா முதல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இந்த கொள்வனவு விலை காலத்துக்குக் காலம் மாற்றம் அடையும். ஆகவே இதன் மூலம் அனைவரும் பயன்பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: