தூரநோக்க சிந்தனையுடன் மக்கள் நலன் சார்ந்த செயற்றிட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து வருவது ஈ.பி.டி.பியே – கட்சியின் தவிசாளர் மித்திரன்!

Friday, June 14th, 2019

ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை பார்க்கிலும் துரநோக்க சிந்தனையுடனும் மக்கள் நலன் சார்ந்த செயற்றிட்டங்களை வகுத்து அவற்றை சிறப்பான முறையில் முன்னெடுக்க வேண்டும் என்பதில் மாத்திரமன்றி கட்சிக் கொள்கை வழியின் பிரகாரம் எப்போதுமே மக்களுக்காக உழைக்கின்ற ஒரே கட்சியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மட்டுமே விளங்குகின்றது என்பதை வரலாறு உணர்த்துகின்றது என கட்சியின் தவிசாளர் மித்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடைபெற்ற கட்சியின் மாவட்ட, பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னராக தமிழ் மக்களின் வாழ்வியலை நாம் நோக்குமிடத்து பல்வேறு காலகட்டங்களிலும் எமது மக்கள் ஒரு நெருக்கடியான சூழல்களிலேயே வாழ்ந்து வந்தார்கள்.

இந்த நிலையில்தான் 70 களின் பிற்பகுதியிலும் 80 களின் ஆரம்ப காலங்களிலும் தமிழ் மக்களுக்கென்று ஒரு தனிநாடு கோரிய ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்றது.

இவ்வாறு ஈழ விடுதலை போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் பல விடுதலை இயக்கங்கள் உருவாக்கம் பெற்றிருந்தன. காலமாற்றத்தில் ஆயுதப் போராட்டம் வேறு வடிவில் முன்னெடுக்கப்பட அதற்கு மாற்றீடாக பல இயக்கங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டன.

ஆனாலும் ஈழ விடுதலை போராட்டம் திசை மாறிச் சென்றாலம் கூட அதனுடைய இலக்கு இறுதிவரை எட்டப்படவில்லை. ஈழப் போராட்ட காலத்தில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்கள் பல தமிழர் தரப்பினராலேயே தூக்கி எறியப்பட்ட கசப்பான சம்பவங்களும் நடந்தேறி இருக்கின்றன.

எனவே இவ்விதமான கசப்பான அனுபவங்களின் பின்விழைவுதான் முள்ளிவாய்க்கால் வரையில் எமது மக்கள் பேரவலங்களை சந்திக்க வேண்டியதொரு நெருக்கடியான அவலமான நிலைக்கு காரணமாக அமைந்திருந்தது.

இந்நிலையில்தான் யுத்த காலத்திலும் சரி யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரான காலத்திலும் சரி எமது மக்களின் வழமான எதிர்காலத்திற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இணக்க அரசியலை தேர்ந்தெடுத்து பல்வேறுபட்ட அபிவிருத்தி உள்ளிட்ட மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு கூடியுமானவரையில் தீர்வு பெற்றுக் கொடுத்திருந்திருக்கிறது.  அதேநேரம் அரசியல் தீர்வு விடயத்திலும் அதிகளவில் முனைப்புக்காட்டியிருந்தது.

இந்தநிலையில் ஏனைய சக தமிழ் கட்சிகள் தங்களுடைய சுயநலன்களிலும் சுகபோகங்களிலுமே அக்கறை காட்டினார்கள் என்பதற்கு அப்பால் தற்போதும் அதன் வழியேதான் அவர்கள் பயணித்தும் வருகின்றன.

ஆனால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வரும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறை படுத்தி அதனூடாக படிப்படியாக எமது மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு  நிரந்தர தீர்வுகாணலாம் என்பதை இற்றைக்கு மூன்று தாசாப்தங்களுக்கு பின்னர் இதர தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது உலக நாடுகளும் அதை ஏற்றுக் கொண்டுள்மை எமது கட்சியின் தூர நோக்க சிந்தனையின் சிறந்த முன்னுதாரணமாக இருப்பதுடன் நாம் மூன்று தசாப்தங்களாக நாம் வலியுறுத்திவரும் அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடும் இன்று  நிதர்சனமாகியுள்ளது.  

அந்தவகையில்தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மக்களின் நல்வாழ்வுக்காகவும் சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்தும் அயராது பாடுபட்டு ஏனைய தமிழ் கட்சிகளை பார்க்கிலும் மாறுபட்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.


பிரதியமைச்சர் அதிபரை தாக்கினார்! ஆசிரியர் தொழிற்சங்கம் முறைப்பாடு!
டெங்கை ஒழிக்க ஒருமணி நேர சுத்திகரிப்பு !
சாவகச்சேரியில் இரு மோட்டார்ச் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் படுகாயம்!
சீரற்ற காலநிலையால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை  அதிகரிப்பு!
மருந்து கையிருப்பபை கணனிமயப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் ராஜித!