துப்பரவு செய்யப்படாத காணிகளுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி அறிவிப்பு!

Saturday, November 28th, 2020

தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கு உள்ளிட்ட உயிர் கொல்லி நோய்களின் தாக்கம் வலுப்பெறும் சூழ்நிலை காணப்படுவதால் சுகாதாரத்துக்கு இடையூறு விழைவிக்கும் வகையில் காணப்படும் பகுதிகளை தூய்மையாக்கி உங்களதும் பிரதேசத்தில் வாழும் ஏனைய மக்களினதும் சுகாதாரத்தை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு வேலணை பிரதேச மக்களிடம் குறித்த பிரதேசத்தின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட தனியாருக்கு சொந்தமான பல காணிகள் பற்றைகள் நிறைந்து காணப்படுகின்றன. இக்காணிகளை தப்பரவு செய்யுமாறு நாம் அறிவிப்புக்களை விடுத்துள்ளோம்.

தற்போது மழை காலம் என்பதால் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்துடன் பாழடைந்து கிடக்கும் நீர் தேங்கக் கூடிய பகுதிகளில் நீர் நிற்பதால் அங்கு நுளம்பின் பெருக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே மக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்களில் தூய்மையாக்கல் நடைபெற்றாலும் தனியாருக்கு சொந்தமான துப்பரவு செய்யப்படாது காணப்படும் பற்றைக் காணிகள் பல எமது பகுதிக்கள் இருக்கின்றன. அவற்றை தூய்மையாக்குமாறு நாம் கோரியுள்ளோம்.

அவ்வாறு தனியாருக்கு சொந்தமான காணிகள் துப்பரவு செய்யப்படாது காணப்பட்டால் அக் காணிகளை சபை கையகப்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்த தவிசாளர் சபையின் ஆளுகைக்கட்பட்ட வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு, அல்லைப்பிட்டி, மண்டைதீவு ஆகிய பகுதிகளிலுள்ள தனியார் காணிகளை துப்புரவு செய்யவேண்டும் என்றும் அவ்வாறு துப்புரவு செய்யாவிட்டால் துப்புரவு செய்வதற்கு செலவழித்த பணத்தையும் தண்டப்பணத்தையும் சபைக்கு வழங்கிய பின்னரே காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வேலணைப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பற்றைக்காணிகளில் கழிவுப் பொருட்களை வீசுவதால் மழைக்காலங்களில் டெங்கு நோய் உருவாகுவதாவும் பற்றைப் பகுதிகளில் வைத்து கால் நடைகள் இறைச்சிகள் வெட்டப்படுவதுமான சமூக விரோதச் செயற்பாடுகளும் இடம் பெறுகிறது.

ஆகவே தான் இத்தகைய செயற்பாடுகளை குறைத்துக் கொள்வதோடு இத்திட்டம் வெற்றி பெற அனைவரும் ஒத்தளைப்பு வழங்க வேண்டுமென அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: