தீவுப் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் படகுகள் பிரதேச சபையின் அனுமதி பெற்றே சேவையில் ஈடுபடலாம்!

Wednesday, June 6th, 2018

யாழ் தீவுப்பகுதி போக்குவரத்துக்கான படகுச் சேவையில் ஈடுபடும் படகுகள் இனிவரும் காலங்களில் பிரதேச சபையில் அனுமதி பெற்றே படகு சேவையை மேற்கொள்ள முடியும் என ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மீளாய்வுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து கட்டணங்கள் சட்டத்துக்கு முரணான வகையில் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அத்தோடு உரிய அனுமதிகள் பெறப்படாது செல்வாக்குகளின் அடிப்படையில் படகுகள் பல சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் நயினாதீவிற்கான படகுச் சேவையை நயினாதீவு விகாராதிபதி மேற்கொண்டு வருகிறார். பிரதேச சபையில் எந்தவிதமான அனுமதியும் எடுக்காமல் அந்த சேவை இடம்பெற்று வருகிறது. ஆனால் அச்சேவைக்கு கட்டணம் அறவிடப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளால் அங்குள்ள மக்களும் அப் பிரதேசங்களுக்குச் சென்று வருகின்ற பயணிகளும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தப்பட்ட போதும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஏனெனில் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்பினர்களும் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர்.

ஆகவே இதற்கொரு முடிவை எடுக்க வேண்டுமென மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கமைய இது தொடர்ச்சியாக இருந்து வருகின்ற பிரச்சனையாகவுள்ளது. தீவுப்பகுதிகளில் படகு சேவையில் ஈடுபடும் அனைத்து படகுகளும் பிரதேச சபையில் அனுமதி பெற வேண்டும். அதற்கான சட்ட ஏற்பாடுகள் விரைவில் அமைக்கப்படும். இதன்படி இனிவரும் காலங்களில் உரிய முறையில் படகு சேவைகள் இடம்பெற வேண்டும்.

தற்போது உள்ளுராட்சி சபைகளின் உப விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதுடன் இதற்கான மேலதிக நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: