தீவகத்தின் மூன்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு எதிராக வேலணையில் போராட்டம்!

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காது முற்று முழுதாக தனது சொந்த சுய நல அரசியலுக்காக ஒருங்கிணைபுக் குழு தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி தீவகத்தின் மக்கள் பிரதிநிதிகளான தமது கௌரவத்தை இராமநாதன் அங்கஜன் அவமானப்படுத்தியுள்ளதாக தீவக தொகுதியின் உள்ளூராட்சி மன்றங்களான நெடுந்தீவு ஊர்காவற்றுறை வேலணை ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வேலணை பிரதேச செயலகம் முன்பாக அங்கஜன் இராமநாதனை வழிமறித்து போராட்டம் நடத்தினர்.
வேலணை பிரதேச செயலக மண்டபத்தில் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு தீவகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறும் என தீவகத்தை உள்ளடக்கும் மூன்று பிரதேச செயலகங்களின் செயலாளர்களால் அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.
இவ் அழைப்பில் பிரதேச சபைகளின் மக்கள் பிரதிநிதிகள் 46 பேரும் புறக்கணிக்கப்பட்டு ஏனைய பொது அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தமக்கு அழைப்பு விடுக்கப்படமை தொடர்பில் உறுப்பினர்கள் பிரதேச செயலரிடம் கேட்டபோது ஒருங்கிணைப்பு குழு தலைவரின் ஒருங்கமைப்பில் தான் இது நடைபெறுகின்றது என்றும் இடவசதி போதாமையால் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த நல்லாட்சியில் ஓர் அமைச்சராக இருந்த அங்கயன் இராமநாதன் அன்றைய அரசுடன் இருந்து மக்களுக்கு எதனையும் செய்து கொடுக்காதிருந்துவிட்டு இன்று கிடைக்கப் பெற்றுள்ள ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியை வைத்து தனது கட்சிக்கான அரசியலை முன்னெடுக்க பயன்படுத்தி வருவதுடன் மக்களதும் மக்களது பிரதிநிதிகளதும் தெரிவுகளை குளறுபடி செய்து நீக்கி தனது சொந்த விருப்புக்களை உட்புகுத்தியதுடன் ஜனாதிபதியால் வழங்கப்படும் திட்டங்களை எல்லாம் தனது சொந்த திட்டம் என்று கூறி ஏமாற்றியும் வருகின்றார்.
இந்நிலையில் இவ்வாறான மோசடிகளை மக்கள் பிரதிநிதிகளான நாம் தட்டிக் கேட்டு விடுவோம் என்ற அச்சத்தால் எம்மை ஒதுக்கிவிட்டு இந்த அபிவிருத்தி கூட்டத்தை மேற்கொள்ளுகின்றார். அத்துடன் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காத இந்த நடவடிக்கையை நாம் எதிர்க்கின்றோம்
இன்னும் ஓரிரு நாள்களில் காலவதியாகவுள்ள ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியைக்கொண்டு அங்கஜன் இராமநாதன் தனது சுதந்திரக் கட்சிக்கான அரசியல் பிரசாரத்தையே அரச அதிகாரிகளூடாக செய்து வருவதாக பரவலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளமையானது அதை உறுதி செய்துள்ளது.
இதனிடையே தீவகத்தின் மூன்று பிரதேச சபைகளிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழரசுக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கியதேசியக் கட்சி, இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்சைக் குழு ஆகியவற்றை உள்ளடக்கி 46 பிரதேச சபை மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|