தீவகத்தின் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் நியமனத்தில் குழப்பம் – எதிர்ப்பு தெரிவித்து பாடசாலையின் கல்விச் சமூகம் போராட்டம்!

Monday, July 17th, 2023

வேலணை மத்திய கல்லூரியில் புதிதாக கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த அதிபர் நியமிப்பதற்கு எதிராக இன்றையதினம் காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பழைய மாணவர்கள் மற்றும் பொது மக்களால் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட  சம நேரத்தில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை வளாகத்தினுள் காணப்பட்டார்.  இந் நிலையில் பாடசாலை வாயிற் கதவுகள் மூடப்பட்டது.

முன்பதாக கடந்த யூன் 9 ஆம் திகதி ஏற்கனவேயிருந்த அதிபர் ஓய்வுபெற்ற நிலையில் புதிய அதிபர் வெற்றிடத்திற்கு  பத்திரிகையில் விண்ணப்பம் பிரசுரிக்கப்பட்ட நிலையில்  இருவர் குறித்த பதவி  நிலைக்கு விண்ணப்பித்திருந்தும் ஒருவர் உரிய தகைமையின்மையால் நிராகரிக்கப்பட்டதுடன் மற்றைய விண்ணப்பதாரிக்கு நேர்முகத் தேர்வு இடம்பெற்று முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் புதிதாக கிறிஸ்தவ அதிபர் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சமயத்தை பாதுகாக்க தனியார் வகுப்புக்களை நிறுத்தும் நடவடிக்கைகளை எடுத்த நிலையில் அதே நிர்வாக கட்டமைப்பு மட்டங்களிலுள்ள அதிகாரிகள் மத முரண்பாட்டினை ஏற்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது பொருத்தமானதல்ல என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை பாடசாலைக்கு கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த அதிபரின் நியமனத்தை நிறுத்துமாறு கோரி ஆளுநருக்கு அனுப்பப்படவுள்ள கடிதத்திற்கு கையெழுத்தும் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: