தீர்வை வரியற்ற வாகன இறக்குமதியால் 38 பில்லியன் ரூபா இழப்பு!

Tuesday, June 13th, 2017

தீர்வை வரியின்றி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதால், அரசாங்கம் 38 பில்லியன் ரூபா வருமானத்தை இழக்க நேரிட்டதாக சிலோன் டுடே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு 40 பில்லியன் ரூபாவாகவிருந்த வரி வருமான இழப்பு இந்த வருடம் 38.2 ஆக அமைந்துள்ளதாக நிதி அமைச்சின் வருடாந்த அறிக்கையை மேற்கோள்காட்டி சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கார்களின் பதிவு 57.2 வீதத்தாலும் பஸ்களின் பதிவு 35.1 வீதத்தாலும் முச்சக்கர வண்டிகளின் பதிவு 56 வீதத்தாலும் குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தீர்வை வரியற்ற வாகனங்கள் இறக்குமதியால் அரசாங்கம் 38.2 பில்லியன் ரூபா வருமானத்தை இழக்க நேரிட்டுள்ளது.தீர்வை வரியற்ற வாகன அனுமதிப்பத்திரங்களால் அரசாங்கத்திற்கு ஏற்படும் நட்டத்தைக் கருத்திற்கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையை இரத்து செய்வதற்கு ஒரு கட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் கடந்த வருடம் மே மாதம் இரண்டாம் திகதி அந்த தீர்மானத்தை மாற்றி பாராளுமன்றத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தீர்வை வரியற்ற அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதனிடையே சலுகை அடிப்படையில் கார்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இந்த மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படும் வகையிலான புதிய சுற்றுநிரூபமொன்றை நிதி அமைச்சு வெளியிட்டது.இதன் பிரகாரம் 25,000 அமெரிக்க டொலர்களை விட குறைந்த பெறுமதியுடைய வாகனத்திற்காக செலுத்த வேண்டிய வரி 35 வீதமாக காணப்படுவதுடன் கிடைக்கும் வரிச்சலுகை 65 வீதமாகும்.

25000 டொலரிலிருந்து 30000 டொலர் வரையான கார்களுக்கு 40 வீத வரியை செலுத்த வேண்டும் என்பதுடன் இதன் மூலம் கிடைக்கும் வரிச்சலுகை 60 வீதமாகும்.

Related posts: