தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்த சுவிஸ் குமார்!

Thursday, September 28th, 2017

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளாக இன்று அறிவிக்கப்பட்ட ஏழு பேரும், தாம் குற்றமற்றவர்கள் என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளிடம், உங்களுக்கு ஏன் மரண தண்டனை வழங்கக்கூடாது? என்று நீதிபதிகள் சார்பில் கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த குற்றவாளிகள் தாம் இந்தக் குற்றத்தினை செய்யவில்லை என அவர்கள் அனைவரும் முற்றாக மறுத்தனர்.நாங்கள் குற்றவாளிகள் அல்ல. முடிந்தால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள் என கொலையின் பிரதான குற்றவாளி சுவிஸ்குமார் தெரிவித்துள்ளார். செய்மதியின் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள் என சுவிஸ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.இதனையடுத்து மரண தண்டனைக்கு மேலதிகமாக குற்றவாளிகள் தலா 10 லட்சம் ரூபா இழப்பீட்டு தொகையை வித்தியாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் நான்காவது குற்றவாளி மகாலிங்கம் சசீந்திரன் மற்றும் 9 ஆவது குற்றவாளி மகாலிங்கம் சசிக்குமார் (சுவிஸ் குமார்) ஆகியோர் 70000 ரூபாவும், ஏனைய குற்றவாளிகள் 40000 ரூபாவும் இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த பணத்தை செலுத்த தவறினால் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 வருட கடூழிய சிறைத்தண்டனை மேலும் அதிகரிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி தீர்மானிக்கும் தினத்தில் குற்றவாளிகளின் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் குற்றவாளிகளுக்கு சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.