தீயில் எரிந்து பெண் உத்தியோகஸ்தர் மரணம் – வலி வடக்கின் முன்னாள் தவிசாளர் சுகிர்தன் சந்தேகத்தில் பொலிசாரால் கைது!

Monday, April 17th, 2023

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் இணைப்பாளரும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சோமசுந்தரம் சுகிர்தன் வீட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட யுவதி அகிலன் விஜிதா தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

31 வயதுடைய குறித்த யுவதி கணவரை விட்டுப் பிரிந்த நிலையில் சுகிர்தனுடன் நெருங்கி உறவை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் –

நேற்று இரவு குறித்த யுவதி விஜிதா சுகிர்தனின் வீட்டிற்கு வந்து சுகிர்தனுடன் வாக்குவாதப்பட்டதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இரவு 10 மணியளவில் குறித்த பெண் தீயில் எரிந்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் 1990 அவசர விரைவு அம்புலன்ஸ் வண்டியில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சுகிர்தனின் மகனான பொலிஸ் கீழ்நிலை அதிகாரி குறித்த யுவதியை சேர்ப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை குறித்த பெண் வலி வடக்கு பிரதேச சபையில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் என்பதுடன், கணவனைப் பிரிந்து சுகிர்தனுடன் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றார் என்றும் இதன்காரணமாக குறித்த யுவதியின் 10 வயதுடைய மகளை பாடசாலை, கல்வி நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு சுகிர்தன் ஏற்றிச் செல்வார் என்றும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் கணவனை பிரிந்து சுகிர்தனுடன் நெருக்கமாக வாழும் குறித்த பெண் தனது கணவனிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார் எனவும் தெரியவருகிறது.

இந்த பெண்ணுக்கும் முன்னாள் தவிசாளரக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதாகவும் அதன் காரணமாகவே இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அயலவர்களால் சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை வலி வடக்கு முன்னாள் தவிசாளரின் மனைவி நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் எரித்துக்கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்’னெடுத்து வருகின்ற நிலையில் சில சட்டத்துறை சார்ந்த சிலர் மற்றும் அதிகார பலமிக்கவர்களின் குறுக்கீடுகள் சுகிர்தனுக்கு சாதகமாக இருப்பதால் உண்மைகள் புலப்படாது தடுக்கப்படவும் வாய்ப்புள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: